தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே உள்ள பனவெளி கிராமம் வெட்டாற்றில் ஒரு இளைஞர் ஒருவர்  கொலை செய்யப்பட்டு கிடப்பதாக   நடுக்காவேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

எஸ்.பி.  மகேஷ்வரன், திருவையாறு டிஎஸ்பி  பெரியண்ணன்,  இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், எஸ்.ஐ. பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, கருப்பு பேன்ட்,  லைட் கிரீன் சட்டை அணிந்த 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர்  ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். சத்தம் போடக்கூடாது என்பதற்காக அவரது வாய் துணியால் கட்டப்பட்டு இருந்தது. 

இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர் மணலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. 

அவரது பெயர் பிரசாந்த் என்று கூறப்படுகிறது. சமையல் வேலை செய்து வந்த இவர் அருகில் உள்ள  கணபதி அக்ரகாரத்தை சேர்ந்த பிளஸ் 2 முடித்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் காதல் ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி உள்ளனர். 

இந்நிலையில், காதல் ஜோடி திருச்சி அடுத்த சமயபுரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததால், பெண் வீட்டார்  9 பேர் நேற்று நள்ளிரவு அங்கு சென்றனர். காதல் ஜோடியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். 

பெண்ணை  உமையாள் அக்ரகாரத்தில் உள்ள உறவினர் வீட்டில் இறக்கி விட்டு விட்டு  காதலனை மட்டும் வெட்டாற்றுக்கு கொண்டு வந்து சரமாரியாக வெட்டியும், உருட்டுக்கட்டையால் அடித்தும் படுகொலை செய்து வீசி விட்டு சென்றது தெரியவந்தது. 

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உமையாள் ஆற்காட்டை சேர்ந்த  2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட காதலனுடன் ஓடிய சிறுமியை மீட்டால் கொலையாளிகள் பற்றிய அனைத்து விவரங்களும் கிடைக்கும் என்பதால் போலீசார் பெண் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்..