காதலித்து திருமணம் செய்த மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அடித்து கொலை செய்து விட்டு, விபத்து என நாடகம் ஆடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காதலித்து திருமணம் செய்த ஜோடி
சென்னையில் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருபவர் டில்லி(எ) புகழ் கொடி(23) இவர் கண்ணகி நகரை சேர்ந்த சரிதாவை(19) உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீட்டில் இருந்து ஓடிச்சென்று இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இந்தநிலையில் கடந்த ஒரு வருடமாக இனை பிரியா ஜோடியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே மனைவி சரிதா தொடர்ந்து செல் போனில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த டில்லி மனைவியை பல முறை கண்டித்துள்ளார். கணவரின் குற்றச்சாட்டை மறுத்த சரிதா தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மனைவி யாரோடு பேசுகிறார் என்பதை கண்காணிக்க மொபைல் போனில் ரிக்கார்டு செய்துள்ளார். அந்த பதிவை தனது மனைவியிடமும் காட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையேயான சண்டை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மனைவியை அடித்த கணவன்
இதனையடுத்து கடந்த 18 ஆம் தேதி இரவு நேரத்தில் சரிதா மீண்டும் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை அதிகரித்துள்ளது. அப்போது டில்லி தனது மனைவியை கட்டை மற்றும் கைகளால் தாக்கியுள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்த பிறகு தனது மனைவியை எழுப்ப டில்லி முயன்றுள்ளார். ஆனால் தனது மனைவி எழுந்திருக்காத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த டில்லி மருத்துவமனைக்கு சரிதாவை கொண்டு சென்றுள்ளார். அப்போது தனது மனைவி வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார் என கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதில் சரிதாவின் உடலில் காயங்கள் இருந்ததையடுத்து இது தொடர்பாக போலீசாரிடம் மருத்துவர்கள் புகார் அளித்தனர்.

கொலையை விபத்து என நாடகம் ஆடிய கணவன்
இதனை தொடர்ந்து கண்ணகி நகர் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றங்களை முதலில் மறுத்த டில்லி பின்னர் தன் மனைவியை தான் அடித்ததாகவும் இதில் அவர் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து டில்லியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடி வாழ்க்கையில் சந்தேகம் என்ற அரக்கன் புகுந்து இருவரின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
