வீட்டை வீட்டு வெளியேறி காதலியுடன் வெளியூருக்கு தப்பி சென்ற இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியும் மாயமாகியுள்ள சம்பவம் தஞ்சையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வெண்ணாற்று கரையில் 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வாயில் துணி கட்டிய நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

  

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மணலூர் கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்பவரை காணவில்லை என நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்று வந்திருந்தது. விசாரணையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பிரசாத் என்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் அருகிலுள்ள இலுப்பக்கோரையூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணுடன் வீட்டிற்கு வந்த பிரசாந்த், பெண்ணை திருப்பி அனுப்பினால் தற்கொலை செய்துகொள்வோம் என தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து வேறு வழியில்லாமல் இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த பெண்வீட்டார் கொலைவெறியுடன் பயங்கர ஆயுதங்களுடன் காதல் ஜோடியை தேடி வந்தனர். 

தன் குடும்பத்திற்கு ஆபத்து என்பதை உணர்ந்த பிரசாந்த், தாய் மலர்க்கொடிக்கு போன் செய்து, தங்கையை அழைத்து கொண்டு கும்பகோணம் செல்லுமாறு கூறியுள்ளார். இந்த நிலையில், சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த காதல் ஜோடியை பிரசாந்தின் நண்பரும் இளம் பெண்ணின் உறவினருமான ஒருவர் சமயபுரத்தில் இறங்குமாறு கூறியுள்ளார். நண்பர் என்று நம்பி சமயபுரம் டோல்கேட் அருகே காதல் ஜோடி பேருந்தில் இருந்து இறங்கியுள்ளது.

 

இதையடுத்து, அங்கு வந்த பிரசாந்தின் நண்பர், காதலை தங்கள் குடும்பம் ஏற்றுகொண்டதாக நைசாகி பேசி அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். கிட்டத்தட்ட 3 மணி நேரமாக பேச்சு நீடித்த நிலையில், திடீரென காரில் வந்த கும்பல் ஒன்று, பிரசாந்தை மட்டும் தனியாக வலுக்கட்டாய கடத்திக் கொண்டு சென்றது. இதையடுத்து, வாயில் துணி கட்டி, தலை உள்பட உடலின் பல பாகங்களில் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமான முறையில் பிரசாந்த் கொல்லப்பட்டது தெரியவந்தது. பிரசாந்தின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் சென்ற இளம்பெண் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பிரசாந்தின் காதலியான அந்த இளம்பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் உண்மையாக வாய்ப்புள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.