காதல் கல்யாணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் மரணம் தொடர்பாக பெண்ணின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் கணவர்-குடும்பத்தினரை வலைவீசித் தேடி வருகிறார்கள்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்கிற சக்திவாணன். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். அதே மில்லில் கடலூர் மாவட்டம் பிஞ்சானூர் பகுதியைச்  சேர்ந்த முருகானந்தம் மகள் திவ்யாவும் வேலை பார்த்து வந்தார். சக்திவாணனும், திவ்யாவும் மில்லில் வேலை பார்த்த போது பேசி பழகினர். இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தனது காதல் மனைவி திவ்யாவை சக்திவாணன் சின்னமூக்கனூருக்கு அழைத்து சென்றார். அப்போது இருவரும் வெவ்வேறு சாதியினர் என்பதால் அவர்களது திருமணத்திற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊருக்குள் வரவிடாமல் தடுத்தனர். இதனால் ஊர்பெரியவர்கள் முன்னிலையில் இருவரையும் பிரித்து வைத்தனர்.

இதைத்தொடர்ந்து திவ்யா தனது தந்தை, தாயுடன் பெங்களூருவிற்கு வந்தனர். அங்கு உள்ள ஒரு கம்பெனியில் அவர்கள் வேலை பார்த்து வந்தனர். திவ்யா பெங்களூருவில் வேலை செய்வது குறித்து தகவலறிந்த சக்திவாணன் அங்கு சென்று அவரை சமாதான செய்து அழைத்து சென்றுள்ளார்.

இந்தநிலையில், திவ்யாவை காணவில்லை என்று அவரது தாய் விஜயகுமாரி பெங்களூரு கே.பி.நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரித்ததில் திவ்யா அவரது கணவர் சக்திவாணனுடன் சென்றதாக உறுதியானது. 

உடனே திவ்யாவின் பெற்றோர் சக்திவாணன் வீட்டிற்கு சென்று தனது மகளை சக்திவாணனுடன் குடும்பம் நடத்த சம்மதிக்குமாறு மாப்பிள்ளை வீட்டாரை கேட்டு கொண்டனர். இருதரப்பினரும் சமாதானம் அடைந்து சக்திவாணன் - திவ்யாவின் காதல் திருமணத்தை ஏற்று கொண்டனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று திவ்யா விஷம் குடித்து விட்டதாக கூறி அவரை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த 17-ந் தேதி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கும் வரும் வழியில் திவ்யா பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இது குறித்து சக்திவாணன் மனைவியின் குடும்பத்தினரிடமும், ஜோலார்பேட்டை போலீசாரிடமும் திவ்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திவ்யா தற்கொலை செய்து கொண்டார் என்று வழக்குபதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு வந்த திவ்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக, திவ்யாவை அவரது கணவர் சக்திவாணன் மற்றும்  குடும்பத்தினர் தற்கொலைக்கு தூண்டியதாக சொல்லி விஜயகுமாரி போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து ஜோலார்பேட்டை போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக கூறி சக்திவாணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குபதிவு செய்தனர். 

இதனையடுத்து போலீசார் திவ்யாவின் உடலை தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு திவ்யாவின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திவ்யா இறந்த தகவலை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்தவுடன் சக்திவாணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். சக்திவாணனும், அவரது குடும்பத்தினரும் பிடித்து விசாரணை செய்தால்தான் திவ்யா எப்படி இறந்தார்? என்பது தெரியவரும். தலைமறைவான சக்திவாணனையும், அவரது குடும்பத்தாரையும் போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.  இளம்பெண் மர்மமாக இறந்ததால் இதுகுறித்து திருப்பத்தூர் ஆர்.டி.ஓ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.