கேரளாவில் காதலனுடன் ஓடிய மகளை அன்பாக அழைத்து வந்து கொலை செய்துவிட்டு தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள புதுவைப் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (54). இவரது மனைவி கீதா(53). இந்த தம்பதியின் மகள் நயனா (24). இவர் பெங்களூர் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். அவ்வப்போது பெற்றோரை சந்தித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நயனா திடீரென மாயமானார். இதனையடுத்து, பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

 

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கோவாவில் உள்ள ஒரு லாட்ஜில் நயனா காதலுடன் தங்கி இருப்பது தெரிந்தது. போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்திவிட்டு திரும்பி வந்தனர். இதையடுத்து மகள் நயனாவை பெற்றோர் சமாதனம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். 

பின்னர், அனைவரும் வழக்கம்போல் தூங்க சென்றனர். இதனையடுத்து, காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது 3 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். பின்னர், 3 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.