மும்பையில் வேறு சாதி நபரை காதலித்து வந்த மகளை கொன்று, உடலை துண்டு துண்டாக்கி வெட்டி சூட்கேசில் எடுத்து சென்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஜானுபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் திவாரி. இவர் பணியின் காரணமாக தனது மகள் பிரின்சியுடன் மும்பையில் குடியேறி வசித்து வந்தார். இந்நிலையில், அவர் மும்பை கல்யாணி ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த 2 சூட்கேஸ்களில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர் கல்யாணி ரயில் நிலையத்தில் இறங்கியதும் ஒரு பெட்டியை மட்டும் ஆற்றில் தூக்கி வீசி எறிந்து விட்டு மீண்டும் ஆட்டோவில் அவர் ஏறியுள்ளார். திவாரியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் திவாரி கையில் வைத்திருந்த மற்றொரு சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் துண்டு துண்டாக ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், திவாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். திவாரியின் மகள் பிரின்சி, தான் பணி செய்த இடத்தில் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். மகளின் காதலுக்கு தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், காதலை விட முடியாது என மகள் பிரின்சி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

இதனால் ஆத்திரமடைந்த திவாரி மகளை கொலை செய்து விட்டு, உடலை துண்டு துண்டாக வெட்டி 2 சூட்கேசில் அடைத்துள்ளார். மேலும் அந்த சூட்கேசுடன் ஆட்டோவில் ஏறிய அவர் கல்யாணி ரயில் நிலையத்தில் அதனை ஆற்றில் வீசி எறிந்துள்ளார். வேறு சாதி இளைஞரை காதலித்த ஒரெ காரணத்தால் பெற்ற மகளை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.