லாட்டரி அதிபர் மார்ட்டினின் காசாளர் பழனிசாமி மரணத்தில், 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக பழனிசாமியின் மகன் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யுக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

கோவை, வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (45). இவர், கோவை, கவுண்டர் மில்ஸ் பகுதியிலுள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக காசாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். 

இந்நிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான தமிழகம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வருமான வரித்துறையினர், காசாளர் பழனிசாமியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியும், தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த பழனிசாமி திடீரென அங்கிருந்த கத்தியை எடுத்து தனது இடது கையின் மணிக்கட்டுப் பகுதியை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள், மகன்கள், மனைவி முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்திவிட்டு சென்றனர். இந்நிலையில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வியாழக்கிழமை நள்ளிரவு பழனிசாமி வந்துள்ளார். பின்னர், வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அலுவலகம் செல்வதாகக் கூறி லுங்கியுடன் வீட்டைவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து மேட்டுப்பாளையம் அருகே ஓடையில் இறந்த நிலையில் பழனிசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பழனிச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமியின் மகன் ரோகின், வருமான வரித்துறை அதிகாரி என்று கூறிக் கொண்டு ஒருவர் வந்ததாகவும், அவர் தந்தையை தாக்கி, சாதி குறித்து இழிவாகப் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரியும் 3 பேர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தொழிலதிபர் மார்டின் மீது எனக்கு சந்தேகம் இல்லை. மேலும் தந்தையின் தலையில் யாரோ பலமாக தாக்கியுள்ளனர். இதனால் தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யுக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.