கிருஷ்ணகிரி செல்லாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன்  லாரி டிரைவர். இவரது மனைவி ஜெரினா . இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை. தற்போது தான்  ஜெரினா மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு கணவன்- மனைவி இருவரும் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். இன்று காலை வெகு நேரமாகியும் ஜெரினாவின் வீட்டின் கதவு திறக்கவில்லை.

இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது வீட்டில் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

உடனே அவர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய 2 பேரையும் கீழே இறக்கினர்.

அப்போதுஅந்த தம்பதியினர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசார் கையில் சிக்கியது. அந்த கடிதத்தில் நாங்கள் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளோம். அந்த கடனை எங்களால் திருப்பி கட்ட முடியவில்லை. இதனால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. அதனால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.

மேலும் உறவினர்கள் யாராவது எங்கள் வீட்டில் உள்ள பொருட்களை விற்று கடன்களை அடைக்குமாறு தெரிவித்து கொள்கிறேன்  என அந்த கடிதத்தில் ஜெரினா எழுதி இருந்தார்.

பின்னர் தம்பதியினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.