வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக்  போன்ற சமூக வலைதளங்கள் பலவிதங்களில் மனிதர்களுக்கு உதவினாலும். அது பெரும்பாலும் தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

குறிப்பாக இந்த சமூக வலைதளங்கள் மூலம் பழகும் ஆண்கள் மற்றும் பெண்கள் சில தவறான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். சில நேரத்தில்  அந்த வலைதளங்கள் உயிரைக் கூட பறித்து விடுகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் தஞ்சை அருகே நடைபெற்றுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவரது வாழ்க்கை, ‘பேஸ்புக்’ பழக்கத்தால் திசை மாறியதுடன் அந்த வாழ்க்கையும் பாதியிலேயே முடிந்து போன பரிதாப சம்பவம்தான் இது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் இந்துமதி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து கால்நடை மருத்துவர் படிப்பு படித்து வந்தார்.

இவருக்கும், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் சதீஷ்குமார் என்பவருக்கும் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் பேஸ்புக்கில் பேசி வந்ததுடன் அடிக்கடி நேரிலும் சந்தித்துக்கொண்டனர். 

இந்த நிலையில் இவர்கள் ஒரத்தநாடு எழுத்துகாரத் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு லிவிங்டுகெதெர் முறையில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்துமதி அந்த வீட்டில் இருந்து வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று படித்து வந்தார்.

எலக்ட்ரீசியனான சதீஷ்குமார், அங்குள்ள ஒரு கடையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்துமதி, தான் வசித்து வந்த வீட்டின் உத்திரத்தில் சேலையில் தூக்குப்போட்ட நிலையில் மர்மமான முறையில் பிணமாக தொங்கினார்.

இதையடுத்து  தாளவாடியில் உள்ள மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போலீசார், இந்துமதியின் கணவர் சதீஷ்குமாரை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்துமதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சதீஷ்குமாரி கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.