நெல்லை அருகே குறிச்சிக்குளம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தளவாய். கூலித்தொழிலாளி. மனைவி சரோஜா. இவர்களுக்கு சந்தனமாரி (15), கொம்பையா (9) என இரு குழந்தைகள். சங்கர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் படித்து வந்தனர். 

பள்ளி விடுமுறை என்பதால் கொம்பையா நண்பர்களுடன் விளையாடச் செல்வது வழக்கம். வழக்கம்போல கடந்த 26ம் தேதி விளையாடச் சென்ற கொம்பையா இரவு 7 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்து போன பெற்றோர் இதுகுறித்து தாழையுத்து போலீசில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொம்பையாவைத் தேடி வந்தனர். 

இந்நிலையில், தாழையுத்து நாரணம்மாள்புரம் நான்கு வழிச்சாலை அய்யா கோயில் அருகே ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது சிறுவன் கொம்பையா எனத் தெரியவந்தது. அவன் பிணமாகிக்கிடந்த இடத்திற்கு அருகே பெரிய கருங்கல் கிடந்தது. தலை சிதைக்கப்பட்டு இருந்தது. ஆகவே மர்ம கும்பல் சிறுவனை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்திருப்பதாக போலீசார் ஊகித்தனர். 

சிறுவன் என்ன காரணத்திற்காகக் கொலை செய்யப்பட்டான் என்ற விவரம் தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கொலையான சிறுவனின் உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.