தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு மாரி செல்வி என்கிற மகள் இருந்துள்ளார். அவரை ஒரு காப்பகத்தில் சேர்த்து பெற்றோர் படிக்க வைத்துள்ளனர். ஆனால் மாரி செல்விக்கு படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்திருக்கிறது. இதனால் காப்பகத்தில் இருந்து அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். அவரை கண்டித்து ராஜேஸ்வரி மீண்டும் காப்பகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 2012 ம் காப்பகத்தில் இருந்து மாரி செல்வி வீட்டிற்கு வந்திருக்கிறார். மகளை கண்டித்த ராஜேஸ்வரி காப்பகத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் மாரிசெல்வி மருத்துத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை மாரி செல்வி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரி செல்வி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜேஸ்வரி கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் ராஜேஸ்வரியின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.