சென்னை அருகே இருக்கும் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கமல்(26). திருப்பதியில் இருக்கும் சட்டக்கல்லூரியில் இவர் வழக்கறிஞர் பட்டப்படிப்பை படித்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அண்மையில் பிறந்தநாள் வந்துள்ளது. அதை தனது நண்பர்களுடன் கொண்டாட முடிவெடுத்து அனைவரையும் அழைத்துள்ளார். பிறந்தநாள் விருந்திற்கு வந்திருந்து நண்பர்கள் கமலுக்கு ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலையை கழுத்திலும் கிரிடத்தை தலையிலும் அணிவித்தனர்.

பின் 4 அடிநீளத்தில் வாள் ஒன்றை கமலுக்கு பரிசாக வழங்கினர். அந்த வாளைக்கொண்டு கமல், நடுரோட்டில் வைத்து பிறந்த நாள் கேக்கை வெட்டி இருக்கிறார். கேக்கில் வழக்கறிஞர் அடையாள சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவ விட அது தற்போது வைரலாகி இருக்கிறது. காவல்துறையினர் கவனத்திற்கு இது செல்லவே, தற்போது விசாரணை நடந்து வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 100 க்கும் மேற்பட்ட ரவுடிகள் புடைசூழ பிரபல ரவுடி பினு வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன்பிறகு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரே வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: இருமுடி கட்டி மலையேறிய ஓ.பி.எஸ்..! சபரிமலையில் பயபக்தியுடன் தரிசனம்..!