கோவையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் முகாமிட்டு இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை, போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நள்ளிரவு முதல் போலீசார் உச்சக்கட்ட பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

ஊடுருவி 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தனை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து, கோவையில் இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்க கூடும் என்ற அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். 

முக்கியமாக கோவையில் காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், மால்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மோப்ப நாய் பிரிவு, வெடி குண்டு மீட்பு பிரிவு, காவல் விரைவு தகவல் பிரிவு மற்றும் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போதிய பாதிகாப்பு போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.