நெல்லை மாவட்டத்தில் நில தகராறில், அண்ணன், தம்பி, தங்கை மூவரும் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நில தகராறில், அண்ணன், தம்பி, தங்கை மூவரும் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவரது சகோதரர் மரியராஜ், சகோதரி வசந்தா. இதில் வசந்தா என்பவர் தாலுகா அலுவகத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர்கள் மூவரும் நாஞ்சான்குளத்தில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கும் அதே பகுதியில் இருக்கும் சித்தப்பா மகனான அழகர்சாமி குடும்பத்துக்கும் நீண்ட காலமாக நில தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில் இருவரது குடும்பத்துக்கும் பிரிச்சனைக்குரிய 1.96 ஏக்கர் நிலமானதும் இருவருடைய தகப்பனாருக்கும் கூட்டுப்பட்டாவாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தான், நேற்று அந்த இடத்தில் அழகர் சாமி ஏற்பாட்டில் ஆழ்துளை கிணறு போடுவதற்காக லாரி வந்துள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த ஜேசுராஜ், சகோதரர் மரியராஜ், தங்கை வசந்தா ஆகியோர் கூட்டுப்பட்டாவில் உள்ள நிலத்தில் தங்கள் அனுமதி இல்லாமல் எப்படி ஆழ்துளை கிணறு அமைக்கலாம் என்று வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாய்தகராறு முற்றி மோதலாக வெடித்த நிலையில், திடீரென 2 குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் ஜேசுராஜ், அவரது சகோதரர் மரியராஜ் , சகோதரி வசந்தா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
மேலும் வசந்தாவின் கணவர் உள்பட படுகாயமடைந்த 3 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், நாஞ்சான்குளம் கிராமத்திலும் அரசு மருத்துவமனையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக நெல்லை மாவட்ட எஸ்.பி, தென்காசி மாவட்ட எஸ்.பி கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். இதன் பின்னர் கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களையும் போலீசார், கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட அழகர் சாமி, அவரது மனைவி, இரு மகன்கள், மருமகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி பிரவேஸ் குமார் தெரிவித்துள்ளார். மோதலில் காயமடைந்ததால், அழகர் சாமி மனைவி, மருமகன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்,தம்பி, தங்கை 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
