Asianet News TamilAsianet News Tamil

லலிதா ஜுவல்லர்ஸ்ல கொள்ளையடிக்கப்பட்ட நகைளின் உண்மையான மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் இருந்து 13 கோடி மதிப்பிலான தங்கம், பிளாட்டினம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். கொள்ளையர்களை போலீசார் விரைவில் பிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார்.
 

lalitha jwellery robbery
Author
Tiruchirappalli, First Published Oct 2, 2019, 11:05 PM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரபல நகைக் கடையான லலிதா ஜுவல்லரி அமைந்துள்ளது. அங்கு புதனன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடை செயல்படும் கட்டடத்தின் பின்புறம் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைக் கடையின் கீழ் தளத்துக்கு வந்து, அங்கே இருந்த அனைத்து தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

lalitha jwellery robbery

புதனன்று காலை வழக்கம் போல கடையைத் திறந்த ஊழியர்கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  அவர்கள் தகவல் அளித்ததையடுத்து, உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளைப் பார்த்தும், தடயங்களை சேகரித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சுமார் 100 கிலோ எடையுள்ள நகைகள் அதாவது ரூ.36 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்திருக்கலாம் என்று தகவல்கள்வெளியானது.

தற்போது கிடைத்திருக்கும் சிசிடிவி காட்சிகளில், கொள்ளையர்கள் இரண்டு பேர் பொம்மைகள் போன்ற முகமூடிகளை அணிந்து கொண்டு கொள்ளையடித்திருப்பதும் கையுறைகளை அணிந்து கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

மிகத் திட்டமிட்டு, பல நாட்களாக நோட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

lalitha jwellery robbery

இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு குறித்து லலிதா ஜுவல்லரியின்  உரிமையாளர் கிரண் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது 'திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் இருந்து 13 கோடி மதிப்பிலான தங்கம், பிளாட்டினம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றும், கொள்ளையர்களை போலீசார் விரைவில் பிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கிரண்குமார் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios