திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி நகைகளை கடந்த 2ம் தேதி கூட்டாளிகளுடன் கொள்ளையடித்த திருவாரூர் கொள்ளையன் முருகனை திருச்சி தனிப்படை போலீசார் துரத்தியதால் வேறு வழியின்றி பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இதுவரை ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் மட்டுமே போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. மற்ற நகைகள் முருகனிடம் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் முருகன் கொடுத்த தகவலின் படி தமிழகம் வந்த கர்நாடக காவல்துறையினர் 11 கோடி மதிப்பிலான நகைகளை மீட்டனர். அவர்களிடம் இருந்து தமிழக காவல்துறையினர் நகைகளை கைப்பற்றியுள்ளனர்.  இதுவரை 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முருகனிடமிருந்து ஒரு சில வழக்குகளில் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

கொள்ளையன் முருகனிடம் விசாரித்து உண்மையை வரவழைப்பது என்பது கல்லில் இருந்து நார் உரிப்பதற்கு சமம் என்று போலீசார் கூறுகிறார்கள். ஏற்கனவே 2015ம் ஆண்டு பெங்களூரில் தொழில் அதிபர் வீட்டில் திருவாரூர் முருகன் கொள்ளையடித்த ரூ.3.16 கோடி நகைகளை மீட்பதற்காக அவனை 90 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பெங்களூர் போலீசார் விசாரித்தனர்.

அந்த அளவிற்கு முருகனிடமிருந்து உண்மையை வரவழைப்பது சிரமம். ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என சுற்றி சுற்றி கொள்ளையடித்த முருகன் போலீசாரிடம் கொள்ளையடித்த பணம், நகை எங்கே என்று கேட்டால் அதற்கு செலவு கணக்கு காட்டுவதற்காகவே சினிமா படங்களை தயாரித்துள்ளான்.
முருகன் கொள்ளையடித்த சம்பவங்கள் அனைத்தும் பல கோடி மதிப்புள்ள வங்கி, நகைக்கடை மற்றும் கோடீஸ்வர தொழில் அதிபர்கள் வீடுகள் போன்ற இடங்கள் தான். கடந்த 15 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களை நடத்திய கொள்ளையன் முருகன் கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.5 கோடி நகை, பணம் கொள்ளை வழக்கிலும் தொடர்புடையவன் என தெரியவந்துள்ளது.

இதுவரை கொள்ளையடித்த பணம் நகை மட்டும் ரூ.100 கோடி மதிப்பு இருக்கும் என்று போலீசார் கூறுகிறார்கள். இவற்றில் பெரும்பாலான பணத்தை சினிமாவில் முதலீடு செய்ததாக முருகன் கூறினாலும் பல சொத்துக்களை தனது உறவினர்கள் பெயரிலும், பினாமி பெயரிலும் முருகன் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திரா திரையுலகிலும், சிறிய படங்களை எடுக்கும் பிரமுகர்களுக்கு முருகன் பைனான்ஸ் செய்த தகவலும் தெரிய வந்துள்ளது. நடிகைகள், துணை நடிகைகள் என பணத்தை தண்ணீராக செலவு செய்ததாக போலீசாரால் கூறப்படும் முருகனின் சுமார் ரூ.100 கோடி சொத்துகள் யார்? யாரிடம் உள்ளது என்பது திருச்சி தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கும் போது தெரியவரும்.

முருகன் 2 சொகுசு கார்களில் சுற்றி வந்துள்ளான். அந்த கார்கள் தற்போது யாரிடம் உள்ளது. சமயபுரம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி லாக்கர் நகை, பணம் எங்கு உள்ளது என்ற தகவலும் அப்போது தெரியவரும். ஏற்கனவே முருகனின் மனைவிகள் மற்றும் உறவினர்களிடம் ஏற்கனவே நடத்திய விசாரணையில் தனிப்படை போலீசார் சில தகவல்களை திரட்டியுள்ளனர். முருகனை விசாரிக்கும்போது மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.