முருகன் பலே திருடனாக இருந்தாலும் அவருக்கு கடவுள் பக்தி அதிகம் என்றும்,  திருடிய நகைகளை பூமிக்குள் புதைத்து வைப்பதான் அவரின்  ஸ்டைல் என்றும்,  முருகனின் மனைவி மஞ்சுளா தகவல் தெரிவித்துள்ளார்.  திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த மாதம் நடந்த கொள்ளைச் சம்பவம் தமிழகத்தை அதிர வைத்தது. 

கொள்ளையில் தொடர்புடைய திருவாரூரைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது உறவினர் சுரேஷ், கூட்டாளி கணேசன் உள்ளிட்ட நபகர்களை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த மாதம் 11ஆம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் முருகன் சரணடைந்தார்.  சரணடைந்த முருகனை கர்நாடக போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.  இதனால் தமிழக போலீசாரும் முருகனிடம் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஆனாலும் முருகனின் உறவினர்கள் மட்டும் கூட்டாளிகளை பிடித்து போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் முருகனின் மனைவி மஞ்சுளாவை அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முருகன்  குறித்து மனைவி மஞ்சுளா தெரிவித்த தகவல் பற்றி போலீசார் கூறியதாவது:-

 

கணவர் திருட்டுத் தொழில் செய்பவர் என்று  திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவந்தது.  ஆனால் அவர் தொழிலில் நான் இதுவரை தலையிட்டதில்லை. அவர் திருட்டுத்  தொழிலில் ஈடுபட்டாலும் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர்.  அவர் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அதிகம் கோவில் குளங்களுக்கு செல்வது வழக்கம். எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு உள்ள கோயிலுக்குச் செல்வோம் . அவரும் என்னுடன் வந்து தவறாமல் சாமி கும்பிடுவார்.  குறிப்பாக கொள்ளையடிக்கும் நகைகளை பூமிக் கடியில் பள்ளம் தோண்டி புதைத்து வைப்பது அவரது ஸ்டைல்...  ஆனால் கொள்ளையடித்த நகைகளை யாரிடம் கொடுத்து வைக்கும் பழக்கம் அவருக்கு கிடையாது. மண் தோண்டி புதைத்து வைப்பதுதான்  வழக்கம் . நகைகளை எங்கு புதைத்து வைப்பார் எப்படி புதைத்து வைப்பார் என்பது யாருக்கும் தெரியாது, அது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால் தேவைப்படும்போது அதை தோண்டி எடுத்து பணமாக்கிவிடுவார், அவரது  மனைவியாக இருந்தாலும் அது குறித்த எந்த தகவலையும்  என்னிடம் கூற மாட்டார்.  மாற்றிய பணத்தை வீட்டில்  தண்ணீர் ஊற்றி வைக்கும்  ட்ரம்மில்  ராகசியமாக வைப்பார். அது மிகவும் ராசியான ட்ரம்... என்று அவருக்கு நம்பிக்கை உண்டு.  வீடு முழுக்க எப்போதும் கட்டுகட்டாக பணம் இருக்கும் என மஞ்சுளா விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

லலிதா ஜுவல்லரி கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்,  திருச்சி கொள்ளிடம்,  மதுரை வாடிப்பட்டி அடுத்துள்ள மேட்டுப்பட்டி மலையடிவாரம், உள்ளிட்ட  பகுதிகளில் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்தனர்.  இந்நிலையில் தமிழகத்தில் மற்ற இடங்களில் கொள்ளையடித்த நகைகளை முருகன் எங்கு வைத்துள்ளார் என்பது குறித்து போலீசார்  தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.