மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர் நாகம்மாள் . இவரது கணவர் பல வருடங்களுக்கு முன்னரே இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் நாகம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறார் . இவர் வட்டிக்கு விடும் தொழில் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது .

மதுரையின் சுற்றுவட்டார பகுதிகளில் மொய் விருந்து நடத்துவது வாடிக்கை . நாகம்மாள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மொய் விருந்து நடத்தி அதில் வரும் பணத்தை வைத்து வட்டிக்கு விடும் தொழில் பார்த்து வந்திருக்கிறார் . அதன்படியே இந்த வருடத்திற்கான மொய் விருந்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நடத்தி இருக்கிறார் .

மொய் விருந்தில் அவர் எதிர்பார்த்த தொகை வரவில்லை என்று கூறப்படுகிறது . அதாவது நாகம்மாள் சுமார் 40 லட்சம் மொய் விருந்தின் மூலம் வரும் என்று நினைத்ததாகவும் ஆனால் 12 லட்சம் நெருக்கத்தில் தான் மொய்ப் பணம் வந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்  . இதனால்  நாகம்மாளின் வட்டிக்கு விடும் தொழில் சரிவர செல்லவில்லை .

இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட  நாகம்மாள் , நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் .  வெகுநேரமாக நாகம்மாளின் வீடு திறக்கப்படாமலிருப்பதை கண்டு சந்தேகம் கொண்ட  அக்கம்பக்கத்தினர் , ஜன்னல் வழியாக பார்த்த போதுதான் நாகம்மாள் தூக்கிட்டது தெரிய வந்தது .

உடனே இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள் . சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் , நாகம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதனிடையே நாகம்மாளின் தற்கொலைக்கு மொய்ப் பணம் குறைவாக வந்தது தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என்றும் விசாரணை செய்து வருகின்றனர் .