வெட்டுப்பட்டு கை துண்டான போதும் வீரத்துடன் போராடி மகனைக் காப்பாற்றிய ராமலிங்கம் …. திருபுவனம் மக்கள் வேதனை !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 8, Feb 2019, 7:56 AM IST
Kumbakonam ramalingam murder
Highlights

மதமாற்றம் செய்ய வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை துரத்தி அடித்தாக கூறப்படும் திருபுவனம் ராமலிங்கம், வெட்டுப்பட்டு கை துண்டானபோதும் கூட தனது மகனை மர்ம  கும்பல்  நெருங்கவிடாமல் தடுத்து காப்பாற்றியதை அப்பகுதி மக்கள் வேதனையுடன் பாராட்டுகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேல தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். . திருவிடைமருதூர் நகர பா.ம.க. முன்னாள் செயலாளரான இவர், திருபுவனத்தில் சாமியானா பந்தல் மற்றும் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார். மேலும் கேட்டரிங் ஏஜெண்டாகவும் இருந்து வந்தார்.

இவர் கடந்த 5–ந் தேதி காலை சமையல் வேலைக்கு ஆட்களை அழைப்பதற்காக திருபுவனம் ஆதிதிராவிடர் தெருவுக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த சிலர் அப்பகுதி மக்களை மதமாற்றம் செய்வதற்கான முயற்சி மேற்கொண்டதாக  கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கும் ராமலிங்கத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது.

இந்நிலையில் அன்று இரவு ராமலிங்கம் வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு தனது மகனுடன்  சரக்கு ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.  திருபுவனத்தில் உள்ள ஒரு தெருவில் சென்றபோது, அவருடைய ஆட்டோவை ஒரு கார் வழிமறித்தது. அதிலிருந்து இறங்கிய கும்பல், ராமலிங்கத்தை ஆட்டோவில் இருந்து இறக்கி அவருடைய இரு கைகளையும் வெட்டினர்.
 
அப்போது அந்த கும்பல் ராமலிங்கத்தின் மகன் ஷியாம் சுந்தரையும் வெட்ட முயன்றது. ஆனால் இரு கைகள் வெட்டப்பட்ட நிலையிலும் அவர் தனது மகனை வெட்ட வந்தவர்களை காலால் எட்டி உதைத்து போராடியுள்ளார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

கைகள் வெட்டப்பட்டதால் ராமலிங்கத்திற்கு ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. அப்போது அந்த பகுதி வழியாக வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமலிங்கத்தை உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே ராமலிங்கம் குறித்து அப்பகுதி மக்கள் பல விஷயங்களை சிலாகித்து சொல்கின்றனர். மக்கள் பணி செய்வதில் சிறந்து விளங்குபவர் என்றும்  வீரம் மிகுந்த அவர் எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்கும் திறன் பெற்றவர் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

loader