மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்! என்பதை நிரூபிக்க ஆயிரம் உதாரணங்கள் இருந்தாலும், இங்கே நாம் பார்க்க இருக்கும் உதாரணமானது மனித மனதின் மிக கேவலமான கோணங்களையும், சக மனிதனை பழிவாங்கும் வெறிக்காக அவன் எந்த அளவுக்கும் கீழிறங்குவான் என்பதையும் துல்லியமாக விளக்குகிறது.
அதாவது, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் பிரபலமான இந்து கோவில் ஒன்று உள்ளது. பெளர்ணமி பூஜை, மாசி மாத திருவிழா ஆகியன அங்கே பிரசித்தம். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து, தங்கி விழாவில் பங்கேற்பார்கள்.

இந்நிலையில், அந்த கோயிலை நிர்வாகம் செய்யும் நபர்களுக்குள் ஏதோ மனக்கசப்பு. குறிப்பாக செயலாளர் பொறுப்பிலுள்ள தங்கமணி என்பவர் மேல் மற்றவர்கள் சிலருக்கு நிறைய கடுப்புகள். இருந்தாலும் கோவில் நன்மைக்காகவும், பக்தர்களின் மன நிம்மதிக்காகவும் இந்த பிரச்னையை தங்களுக்குள் மட்டுமே வைத்து, வெளியே காட்டாது கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அந்த நிதானம் சமீபத்தில் சிதைந்துவிட்டது. சமீபத்தில் பெளர்ணமியன்று கோவிலுக்கு அதிக கூட்டம் வந்திருக்கிறது. அப்போது குளியலறைக்குச் சென்ற பெண் ஒருவர், அங்கே சம்பந்தமில்லாமல் ஒரு வொயர் தொங்குவதை கவனித்திருக்கிறார். அதை இழுத்துப் பார்த்தவருக்கு செம்ம ஷாக். காரணம், மறைத்து வைக்கப்பட்ட கேமரா தலையை காட்டியிருக்கிறது. ஆத்திரமடைந்த அந்தப் பெண், இந்த விவகாரத்தை மற்றவர்களிடம் கூற, ஏக அமளிதுமளி.

ஆளாளுக்கு பேசி, பிரச்னை செய்து கடைசியில் கோவில் நிர்வாகிகளுக்குள் இருக்கும் பிரச்னையால் ஒருவரை பழிவாங்க இன்னும் சிலர் வைத்த வினை இது, என்பது போன்ற முடிவுக்கு வந்துள்ளனர். செயலாளர் பொறுப்பில் உள்ள தங்கமணியோ “என்னைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு இப்படியொரு அசிங்கத்தை செய்துள்ளனர். என்னை பதவி விலக சொன்னால், ஒரு நிமிஷத்தில் செய்துவிட்டு போய்விடுவேன். ஆனால் இப்படியொரு பாதகத்தை செய்துவிட்டார்கள். அவர்கள் சட்டத்தில் இருந்து கூட தப்பிக்கலாம், ஆனால் சாமி சும்மாவிடாது.” என்றிருக்கிறார்.

விளாத்திகுளம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரோ “மொத்தம் மூன்று கேமெராக்கள் வைத்துள்ளனர் கோவில் குளியலறையில். அதில் ஒரு கேமெரா செல்போன் உதவியுடன் இயங்க கூடியது. மற்ற இரண்டும் சாதாரண கேமெராக்கள். மூன்று கேமெராக்களுக்கும் எந்த வித இணைப்புகளுடனும் இணைக்கப்படவுமில்லை, கேமெராவில் எந்த காட்சியும் பதிவாகியிருக்கவில்லை. முன்விரோதத்தில் பழிவாங்குவதற்காக, ஒரு பிரச்னையை உருவாக்கும் நோக்கில் வைத்துள்ளார்கள் போல் தெரிகிறது. விசாரித்து வருகிறோம், குற்றவாளியை நிச்சயம் பிடிப்போம்.” என்றிருக்கிறார்.
