ஆசிரியர் பாலியல் தொல்லை… பூட்டிய வீட்டில் தூக்கில் தொங்கிய 12-ம் வகுப்பு மாணவி.. | Kovai student suicide
கொரோனா ஊரடங்கு நேரத்தில் மாணவியை பள்ளிக்கு வரச்சொன்ன ஆசிரியர், மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர் மகுடேஷ்வரன். இவரது 17 வயது மகள் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தணியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த பள்ளி பிடிக்கவில்லை என்று கூறி பெற்றோரை வற்புறுத்தி மாற்றுச் சான்றிதழ் வாங்கி வேறு பள்ளியில் சேர்ந்துள்ளார். பள்ளி மாறிய பின்னரும் கவலையுடன் காணப்பட்ட மாணவி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியறையில் உள்ளே பூட்டிவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரில் உக்கடம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இயற்பியல் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை
மாணவியின் தற்கொலை குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் இதற்கு முன்னர் படித்துவந்த சின்மயா பள்ளியில் பணியாற்றிய இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, மாணவிக்கு வாட்ஸாப்பில் பாலியல் தொல்லை அளித்துவந்தது தெரியவந்தது. ஆசிரியர் கொடுமை குறித்து மாணவியின் பெற்றோர் ஏற்கெனவே அந்த பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் தங்கள் பெயரை காப்பாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்காமல் விட்ட பின்னரே மாணவி வேறு பள்ளிக்கு மாறியிருக்கிறார்.
மாணவியின் தற்கொலையால் கதறி அழும் பெற்றோர்
மாணவியின் உயிரிழப்பை தாங்க முடியாமல் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தாயார், கடந்த ஆறு மாசமா என் பிள்ளைக்கு அந்த ஆசிரியரால் தொல்லை இருந்திருக்கு. நாங்களே இதபத்தி பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டோம். பஸ்ல போகும்போது ரெண்டு பேர் இடிச்ச மாதிரி நெனச்சிக்கிட்டு விட்டுடுங்க. பெரிதுபடுத்தினா, உங்க பேரும் கெடும்னு சொல்லி பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கல. என் மகள் அடிக்கடி வீட்டில் அழுதுட்டு இருப்பா. ஏன்னு கேட்ட ஒன்னுமில்லம்மான்னு சொல்லிட்டு போயிடுவா. பச்சை மண்ணு அவ, இப்படி எங்கள தவிக்க விட்டு போயிட்டா என்று கதறி துடித்துள்ளார்.
யாரையும் சும்மா விடக்கூடாது – மாணவியின் தற்கொலை கடிதம்
இதனிடையே தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் மாணவி எழுதிவைத்த கடிதம் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அதில் யாரையும் சும்மா விடக்கூடாது என்று மாணவி எழுதியிருக்கிறார். ரீத்தாவோட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், யாரையும் விடக் கூடாது, என மாணவி கைப்பட எழுதிய கடிதத்தை வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தனியறையில் ஆசிரியர் தொல்லை – மாணவியின் நண்பர் அதிர்ச்சி வாக்குமூலம்
இதனிடையே ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தற்கொலை செய்துகொண்ட மாணவியின் நண்பர் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து பேசிய அவர், நான் அவளுடைய வகப்பு தோழன். சின்மயா வித்யாலயா ஸ்கூலில் அவள் படிச்சிட்டு இருந்தப்போ, அங்க மிதுன் சக்ரவர்த்தி, நண்பராக பழகினார். ஒருமுறை அவளோட அப்பா பள்ளிக்கு வர லேட் ஆனதால, ஆசிரியரே அவளை பைக்கில் வீட்டில் கொண்டுபோய் விட்டார். போன ஏப்ரல் மாதம் பள்ளி அவளை பள்ளிக்கூடத்திற்கு வரச் சொல்லிருக்கார். சார் கூப்பிட்டதால் பள்ளிக்கு போனவள, பள்ளிக் கட்டடத்தின் மாடியில் உள்ள ஆடிட்டோரியத்திற்கு வரச் சொல்லிருக்கார். அங்க போனதும் அவளோட மேலாடைய கழட்டிட்டு தவறா நடந்துக்கு முயற்சி செய்திருக்கிறார். இந்த பிரச்சினைய அவ என்கிட்ட சொன்னதும் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டோம்.
ஆனால், நீயும்தான் அவர் கூட பைக்கில் போயிருக்க, அதனால உன் மேலயும் தப்பிருக்கு இதபத்தி நீ வெளியே சொல்ல வேண்டாம்னு அந்த பள்ளியோட தலைமை ஆசிரியர் சொல்லிட்டார். அதுக்கு மேலயும் அங்க இருக்க முடியாமதான் அவ வேற பள்ளிக்கூடத்துக்கு போனா, அப்புறமும் தொல்லை இருந்ததால் இந்த முடிவை எடுத்துட்டா என மாணவியின் நண்பர் கண்ணீரோடு கூறியிருக்கிறார்.
புகார் அளித்தபோதே, இயற்பிய ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவியின் உயிர் இபடி அநியாயமா போயிருக்காது என பெற்றோர்கள், உறவினர்கள் கதறியழுகின்றனர். சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்ததும் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் காவல் துறையை உடனடியாக நாடியிருந்தாலும் மாணவியின் உயிர் போயிருக்காது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.