பிளஸ்-1 படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த 16 வயது சிறுமி கோவையில் சுங்கம் பகுதியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி இருந்து பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கும் பனந்தோப்புமயில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபருக்கும் கடந்த 1 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தால்  2 பேரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரிய வர அவர்கள் மாணவியை கோவையில் உள்ள பள்ளியில் சேர்த்தனர். அங்கு படித்து வந்த மாணவி திடீரென காணாமல் போனார். இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் தனது மகளை கண்டு பிடித்து கொடுக்குமாறு ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் அளித்திருந்தனர். 

இந்நிலையில், போலீசார் நேற்று கோவையில் சுற்றி திரிந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாணவியை, சந்தோஷ் என்பவர் கல்யாணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கேரளாவுக்கு அழைத்து சென்று அங்கு லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் , அங்கிருந்து அழைத்து வந்து கோவையிலும் இரண்டு நாட்கள் தனியார் லாட்ஜில் வைத்திருந்துள்ளார். 

இதனை தொடர்ந்து அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சந்தோஷ் மீது மத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.