குடிப்பதற்கு 25 ரூபாய் பணம் தராததால் ஆத்திரமடைந்த நபர், நண்பனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் சின்னதடாகம் அருகே உள்ள மேட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 33, பொக்லின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம் கொண்டவர். 

கடந்த, 6-ம் தேதி காலை, 7:00 மணிக்கு அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். வீடு திரும்பவில்லை. மதியம், 12:00 மணிக்கு அங்குள்ள முனியப்பன் கோவில் அருகே தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்தக்கறை படித்த கல்லும் இருந்தது. கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதில், பன்னிமடை, கொண்டசாமி நகரை சேர்ந்த அருண்குமாரும், கொலை செய்யப்பட்ட ஆனந்தகுமாரும் நண்பர்கள் என தெரியவந்தது. இருவரும் சேர்ந்து தினமும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சம்பவத்தன்று அருண்குமார், குவார்ட்டர் பாட்டில் வாங்க 25 ரூபாயை ஆனந்தகுமாரிடம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என ஆனந்தகுமார் கூற இருவருக்கும் இடையே டாஸ்மாக் கடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

பின்னர் ஆனந்தகுமாரை தரதரவென இழுத்து சென்று முனியப்பன் கோவில் அருகே உள்ள குழியான பகுதியில் தள்ளி, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அருண்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.