வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் சரசு. இவருக்கு ஜீவிதா என்கிற இரண்டு வயது குழந்தை இருக்கிறது. கடந்த 26ம் தேதி சரசு தனது குழந்தையுடன் திருச்சி சென்றிருந்தார். மத்திய பேருந்து நிலையத்தில் அவர் நின்று கொண்டிருந்த போது, அங்கு பர்தா அணிந்த ஒரு பெண்ணும் அவரது கணவரும் வந்தனர். சரசுவிடம் பேச்சு கொடுத்த அந்த தம்பதி, சிறிது நேரத்தில் அவரின் கவனத்தை திசை திருப்பி, குழந்தை ஜீவிதாவை கடத்திச் சென்றனர்.

அதிர்ச்சியடைந்த சரசு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை காவலர்கள் ஆய்வு செய்தனர். அதில் பர்தா அணிந்த பெண்ணும் அவரது கணவரும் குழந்தையை தூக்கிச் சென்றது பதிவாகி இருந்தது. இதையடுத்து குழந்தையின் புகைப்படம் அனைத்து மாவட்ட காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது.

இதனிடையே கோவையில் குழந்தையுடன் சுற்றித் திரிந்த ஒரு தம்பதியை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்தது திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை ஜீவிதா என்பது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தை மீட்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் ராமநாதபுரத்தை சேர்ந்த குகன்(26) மற்றும் அவரது மனைவி சாராம்மாள்(25) என்பது கண்டறியப்பட்டது. திருச்சி போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

குழந்தை என்ன காரணத்திற்காக கடத்தப்பட்டது? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: கஞ்சாவுக்கு அடிமையான கடைசி மகன்..! ஆத்திரத்தின் உச்சியில் கொடூரமாக கொன்ற தாய்..!