திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே தம்பதியரை தாக்கி கொள்ளையடிக்க முயன்றது தொடர்பான வழக்கில் முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் 68 வயதான சண்முகவேல். இவருடைய மனைவி செந்தாமரை. கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இவர்கள் இருவரும் தங்களது பண்ணை வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் அரிவாளுடன் வந்து திருட முயற்சி செய்தனர்.

அவர்களை தம்பதியர் இருவரும் விவேகத்துடனும், வீரத்துடனும் செயல்பட்டு விரட்டியடித்தனர். இந்த தம்பதியரின் துணிச்சலை பலரும் பாராட்டினர்.  அவர்களின் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. 50 நாட்களுக்கு மேலாக நடந்த விசாரணைக்கு பின், கொள்ளை முயற்சியில் தொடர்புடைய முக்கிய நபரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொள்ளையர்களை வீரத்துடனும், விவேகத்துடனும் விரட்டியடித்த இந்தத் தம்பதிகளுக்கு சுதந்திர தினத்தில் தமிழக அரசு வீரத்தம்பதி விருது கொடுத்து கெளரவப்படுத்தியது.