அக்கா தங்கைகளான சிறுமிகள் அடுத்தடுத்து பாலியல் வன்புணர்வு செய்து   கொலை செய்யப்பட்ட வழக்கில் சரியாக வாதிடாத அரசு வழக்கறிஞரை கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.  பல அதிரடி மாற்றங்களை செய்துவரும் அவரின் உத்தரவு அம்மாநில மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்டு வருகிறது.   கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வாளையார் அட்டம்பள்ளத்தை சேர்ந்த தம்பதி ஷாஜி - பாக்கியம்,  இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.  மூத்த மகளுக்கு 13 வயதாக இருந்தநிலையில் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

அச்சிறுமியின் தங்கை போலீசிடம் இரண்டு முகமூடி நபர்கள் மீது புகார் கூறினார் ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை இந்நிலையில் அந்த சம்பவம் நடந்த இரண்டு மாதங்களிலேயே சிறுமியின் தங்கையும் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார் .  ஒட்டுமொத்த கேரளாவையே இது உலுக்கியது இது தொடர்பான  வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதாவது இரண்டு சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில்  சிறுமிகளின் தாய் வழி உறவினர் மற்றும்  அவர்களின் தந்தையின் நண்பரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.  இதுதொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.  மேலும் இந்த வழக்கில் சரியான ஆதாரங்கள் மற்றும்  தெளிவான வாதம் இல்லாத நிலையில்,  வழக்கு விசாரணைக்கு போதிய முகாந்திரம் இல்லை எனகூறி  கேரள நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் விடுதலை செய்தது.  சிறுமிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் தப்பி விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிறுமிகள் வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் லதா ஜெயராஜ் என்பவரை அரசு வக்கீல் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக கூறியுள்ள அவர், சிறுமிகள் வழக்கில் மெத்தனமாக நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் .  சிறுமிகளின் பெற்றோர்கள் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அரசு உதவி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.  அவரின் இந்த நடவடிக்கையை அம்மாநில மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.