சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ளது கிச்சுகுத்தி மாரம்மா கோவில். இக்கோவிலில், அம்மன் மாரம்மாவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கோவிலில் கோபுரம் கட்டும் திருப்பணி தொடங்கியது.

தற்போது அப்பணி முடிந்து கோபுரத்தின் மேல் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி சுலவாடி கிராமத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் கூடினர். இதில் 25-க்கும் மேற்பட்டோர் அய்யப்ப பக்தர்கள் ஆவர்.

கோபுரத்தின் மீது கலசம் வைக்கப்படுவதையொட்டி காலை முதலே கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. அதேபோல் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதமும் தயார் செய்யப்பட் டது. பின்னர் கோபுரத்தின் மீது கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களில் சிலர் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். சிலர் வாந்தி, தலைவலியால் துடித்தனர். இதையடுத்து உடனடியாக கோவில் நிர்வாகிகள் ஆம்புலன்சை வரவழைத்து பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


இதில் சிகிச்சை பலனின்றி 12 பேர் பலியானார்கள். மேலும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் மேல்சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மாரம்மா கோவிலை நிர்வகிப்பதில் 2 பிரிவினருக்கு இடையே கோஷ்டி மோதல் இருந்துள்ளது. அதன் காரணமாக ஒரு கோஷ்டியினர் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் விஷத்தை கலந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.”

.இன்னும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதால் இச்சம்பவத்தில் சாவு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.  இதற்கிடையே பிரசாதத்தில் விஷம் கலந்ததாக சந்தேகத்தின்பேரில் சுலவாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பி, மாதேஷ் ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியானவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் குமாரசாமி, அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார்.

இந்த நிலையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதுபோக மீதமிருந்த பிரசாதம் கோவிலின் பின்புறம் வீசப்பட்டு இருந்தது. அதை தின்ற 60 காகங்கள் உள்பட 300 பறவைகள் பரிதாபமாக செத்து விழுந்தன. அவைகள் கோவிலைச் சுற்றி ஆங்காங்கே கிடந்தன. இதனால் அங்கு ஏராளமான காகங்கள் திரண்டு கோவிலைச் சுற்றி பறந்தபடி இருந்தன. இதன் காரணமாக அந்த இடமே சோகமாக காட்சி அளித்தது.

பாதிக்கப்பட்டவர்களில் பலர் தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்தவர்கள். அவர்கள் மாரம்மா கோவில் வழியாக நடந்து வந்தபோது அங்கிருந்த பூசாரி, மாரம்மாவை தரிசித்துவிட்டு பிரசாதம் பெற்றுச் செல்லுமாறு அவர்களிடம் கூறினார். அதன்பேரில் அவர்கள் மாரம்மாவை தரிசனம் செய்துவிட்டு, பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.