புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இருக்கிறது நொடியூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) . 13 வயது சிறுமியான இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா பரவுதல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் வீட்டில் இருந்த சிறுமி நேற்று முன்தினம் காலை தண்ணீர் எடுப்பதற்காக அருகே இருக்கும் குளத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை தேடி சென்றுள்ளனர்.

குளக்கரையில் சிறுமியை காணாததால் பல இடங்களில் தேடினர். அப்போது அங்கிருக்கும் ஒரு தைல மரக் காட்டில் உடலில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் சிறுமி கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுக்குள் காயங்களுடன் சிறுமி கிடந்ததால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.

சிறுமியின் உடல் நேற்று மாலை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வந்துள்ளது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்பது தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் முன்பகையில் சிறுமி கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணங்களா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை 6 தனிப்படைகள் அமைத்து காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். கிராமத்தில் சந்தேகம் கொள்ளும்படி இருப்பவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த வாரம் தான் விழுப்புரத்தில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் குடும்ப பகையில் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார். அது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாணவி கொல்லப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.