சென்னை அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகேஷ், தாம்பரம் அடுத்த வேடமங்கலத்தில் தனது நண்பர் விஜய் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் ஒரு அறையில் பேசிக் கொண்டிருக்க, விஜயின் தம்பி உதயா மற்றும் அண்ணி ஆகியோர் வேறு அறையில் இருந்துள்ளனர். 

திடீரென துப்பாக்கி வெடி சத்தம் கேட்டதால் இருவரும் ஓடிச்சென்று பார்த்தபோது, முகேஷ் நெற்றியில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதற்குள் துப்பாக்கியுடன் விஜய் தப்பியோடினார்.

அக்கம்பக்கத்தின்ர் முகேஸை மீட்டு, குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், முகேஷ் இறந்தார்.

இது குறித்து தாழம்பூர் போலீசார், தம்பி உதயாவை பிடித்து விசாரித்தனர். விஜயின் பெற்றோர், அண்ணன் ஆகியோரும் தலைமறைவாகினர். உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருக்கும் விஜய்க்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது தெரியாமல் போலீசார் குழம்பி போயிருந்தனர்.இந்நிலையில், தேடப்பட்டு வந்த விஜய், செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைந்தார்.

விஜய் மீது ஏற்கனவே 2 வழிப்பறி வழக்குகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கொலை குறித்து வாக்குமூலம் தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பாக குப்பைத்தொட்டியில் இருந்து துப்பாக்கியை எடுத்தேன். 


மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த துப்பாக்கியை தீபாவளி பண்டிகையின் போது வெளியே எடுத்தேன். முகேஷ் நெற்றியில் விளையாட்டாக வைத்து அழுத்தியபோது வெடித்தது, என விஜய் வாக்குமூலம் அளித்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.