ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாக பேசி, ஆடியோ வெளியிட்டது தொடர்பாக இன்று மாலை சிங்கப்பூரோலிருந்து வந்த கனிமொழி என்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை பற்றி இழிவாக பேசிய, ஆடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம், 19ல் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், மக்கள், போலீஸ் ஸ்டேஷனை முற்றகையிட்டனர். இதைத் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்வதற்காக, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, ஆடியோ வெளியிட்டதாக இதுவரை, 8 பேரை கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில்,  சிங்கப்பூரில் இருந்து  ஜாதி ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து ஆடியோ வெளியிட்ட கனிமொழி என்ற பெண்ணையும் சிங்கப்பூரில் இருந்து வரவழைத்து ஏர்போர்ட்டிலேயே வைத்து கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா மாதவன் குடிகாட்டைச் சேர்ந்த கனிமொழி  சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வருகிறார்.  இவர், கடந்த மாதம் 23 ஆம் தேதி தன் சமுதாய பெண்களை இழிவாக பேசியதாக  மற்றொரு சமுதாய மக்களை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டார்.

இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து பாப்பாநாடு காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் இந்திய தூதரகம் மூலம் கனிமொழியை இந்தியாவிற்கு அழைத்து வேலை தீவிரமாக நடந்தது.  தூதரகத்தின் மூலம் அனைத்து விமான நிலையங்களுக்கும் கனிமொழி பற்றிய விவரங்களை அறிக்கையாக அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய கனிமொழியை, பாப்பாநாடு காவல் ஆய்வாளர் ஹேமலதாவால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த ஆடியோ விவகாரத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்காக புதுக்கோட்டை போலிசார் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.  சர்ச்சை ஆடியோ விவகாரத்தில் இதுவரை, 9 பேரை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.