உத்திரமேரூரில் இளம்பெண் மர்மசாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தந்தையே மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக கூறி நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. 

உத்திரமேரூர் பேரூராட்சி வெங்கட்டையா பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாலாஜி (49). தீயணைப்பு வீரர். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகள் செந்தாரகை (24). கடந்த 2 மாதங்களுக்கு முன் செந்தாரகைக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 8ம் தேதி செந்தாரகை, பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, குளியல் அறையில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து, செந்தாரகையின் உடலை அவசர அவசரமாக சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். 

இதனால், சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், திருமணமாகி சில மாதங்களே உயிரிழந்ததால்  சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில், செந்தாரகை பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து போலீசார், தந்தை பாலாஜியிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில், திருமணத்துக்கு முன் செந்தாரகை, வேறு ஒரு வாலிபரை காதலித்துள்ளார். அவரது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததால், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உடனடியாக வரன் பார்த்து, வேறு ஒருவருக்கு செந்தாரகையை திருமணம் செய்து வைத்தனர். இதனால் மனமுடைந்த செந்தாரகை, கணவன் வீட்டில் வாழாமல் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அவரை பெற்றோர், சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால், பலனில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி, மகளின் கழுத்தை நெரித்து பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் மயங்கி விழுந்த செந்தாரகை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததும், பின்னர் போலீசுக்கு பயந்து குளியல் அறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக கூறியதும் தெரிந்தது. இதயைடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.