காஞ்சிபுரம் பகுதியில் மறைந்த ரவுடி ஸ்ரீதருக்கு பின் யார் தாதா என்ற போட்டியில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட படுகொலை நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

காஞ்சிபுரம் பகுதியில் ரவுடியாக கொடிகட்டி பறந்த ரவுடி ஸ்ரீதர் கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, அவரது இடத்தை யார் கைப்பற்ற வேண்டும் என ஸ்ரீதரின் ஓட்டுனர் தினேஷ் மற்றும் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா ஆகியோரிடையே நடைபெறும் கேக் வார் காஞ்சிபுரத்தை நிலைகுலைய செய்துள்ளது. இதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ரவுடி ஸ்ரீதரின் இறப்பிற்கு பிறகு கடந்த 3 மாதங்களில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறி உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே உள்ள செய்யாறு பகுதியில் தினேஷ் ஆதரவாளரான சதீஷ்குமார் என்பவர் பேருந்திலேயே வைத்து 10 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது தணிகா ஆதரவாளர் வழக்கறிஞர் சிவக்குமாரை வெட்டிய வழக்கு உள்ளது. இதற்குப் பழி தீர்ப்பதற்காக தினேஷ் ஆதரவாளர்கள், தணிகாவின் ஆதரவாளர்களான காஞ்சிபுரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்த கருணாகரன், விக்னேஷ் ஆகியோரை வெட்டினார்கள். இதில் கருணாகரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கடந்த மாதம் தினேஷ் மற்றும் `பொய்யாகுளம்’ தியாகு ஆகிய இருவரையும் கைது செய்து நேற்று முன்தினதம் அவர் குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனாலும், சிறையில் இருந்தாலும் பழிக்கு பழி வாங்க வேண்டும் என தினேஷ் கொலைவேறியில் இருந்து வந்தார். 

இந்நிலையில், திருவள்ளூர் அருகே தணிகாவின் நெருங்கிய கூட்டாளிகளான `மார்க்கெட்’ ஜீவா மற்றும் கோபி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். தற்போது, முக்கிய ரவுடியான தணிகா தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால் இந்த கொலைப்பட்டியல் மேலும் நீளும் என்பதால் காஞ்சிபுரம் பகுதி மக்கள் தொடர் பீதியில் உள்ளனர்.