ஏ.டி.ஜி.பி. அலுவலர் தலைமையில் குண்டர்களை ஒடுக்க தனிப்படை ஒன்றை அமைக்க பஞ்சாப் காவல் துறை தலைவர் வி.கே. பாவ்ராவுக்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மன் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் பல்கலைக்கழக வாயிலில் நேற்று இரவு நடைபெற்ற மோதலின் போது கபடி வீரர் தர்மிந்தர் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி மற்றொரு சர்வதேச கபடி வீரர் சந்தீப் சிங் நங்கல் அம்பியன் நான்கு பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இந்த கோர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் கனடா நாட்டை சேர்ந்த என்.ஆர்.ஐ. ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு:
தவுன் கலன் கிராம கபடி சங்கத்தின் தலைவராக தர்மிந்தர் சிங் இருந்து வந்தார். இதுமட்டும் இன்றி தர்மிந்தர் சிங் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் தர்மிந்தர் சிங் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் தேர்தலில் போட்டியிட்ட மற்றொரு கபடி வீரரான குர்லால் கானுருக்கு ஆதரவாக கானுர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தவுன் கலன் மற்றும் தெரி கிராமங்களை சேர்ந்த குழுவினர் நேற்று மாலை பல்கலைக்கழகத்தில் மோதிக் கொண்டனர். சிறிது நேரத்தில், தர்மிந்தர் சிங் தனது கிராமத்திற்காக எதிர்தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை பல்கலைக்கழகத்தின் எதிரே அமைந்துள்ள தாபா ஒன்றில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டு, யாரோ ஒருவர் தர்மிந்தர் சிங்கை சுட்டுள்ளனர்.
விசாரணை:
"சடலத்தை கைப்பற்றி இருக்கிறோம். இந்த வழக்கு குறித்து விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில் நான்கு பேரை கண்டுபிடித்து இருக்கிறோம். முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது," என பட்டியாலா எஸ்.எஸ்.பி. நானக் சிங் தெரிவித்தார். உயிரிழந்தவரின் உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் குண்டர்களுக்கு தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஏ.டி.ஜி.பி. அலுவலர் தலைமையில் குண்டர்களை ஒடுக்க தனிப்படை ஒன்றை அமைக்க பஞ்சாப் காவல் துறை தலைவர் வி.கே. பாவ்ராவுக்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மன் உத்தரவிட்டுள்ளார். காவல் துறையை சேர்ந்த உயர் அலுவலர்களுடனா் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும் இந்த பணிகளுக்கு தேவைப்படும் ஆள்பலம், அதிநவீன உபகரணங்கள், உயர் ரக தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை வழங்குவதாக உறுதி அளித்தார்.
