Asianet News TamilAsianet News Tamil

சிங்க மூகமுடி.. சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நகைகள்.. புது ரூட்டில் ஸ்கெட்ச் போட்ட கொள்ளை கும்பல் பின்னணி ..?

Jos alukkas robbery : ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மயானத்தில் புதைத்து வைத்திருந்த நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Jos alukkas Robbery Case
Author
Vellore, First Published Dec 20, 2021, 2:39 PM IST

Jos alukkas robbery : வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 15 கிலோ தங்கம், 500 கிராம் வைரம் கொள்ளை போனது. போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகையானது உருக்கப்பட்டு சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நகைகளை காவல் துறையினர் தோண்டி எடுத்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் கொள்ளை கும்பலைப் பிடிக்க 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல்கட்டமாக நகைகடையை முழுவதுமாக சோதனை செய்த தனிபடை போலீசார், நகைகடை மற்றும் சுற்றியுள்ள பகுதியிலுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் வேலூர் - காட்பாடி சாலை, வேலூர் - ஆற்காடு சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளும் விசாரணை வளைத்திற்குள் கொண்டு வரப்பட்டன. 

மேலும் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டையை நடத்தினர். மேலும், வேலூரில் உள்ள தங்கும் விடுதிகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள வீடுகள், மாவட்ட எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தினர். நகைக்கடை அமைந்துள்ள தோட்டப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே நகைக்கடையில் பணியாற்றும் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நகைக்கடை அமைந்துள்ள இடத்தின் அருகில் தங்கும் விடுதியின் கட்டுமானப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் அந்த கட்டிடத்தில் தங்கியுள்ள வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களை சேர்ந்தவர்களிடம் கைரேகைகளை பதிவு செய்து, விசாரணை முடியும் வரை யாரும் எங்கேயும் செல்லக்கூடாது என எச்சரித்திருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சிக்கிய சிசிடிவி பதிவில், நகைக்கடை திருட்டு சம்பவத்தில் கடையின் பின்பக்கம் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த சிங்க முகமூடி அணிந்த நபர் ஒருவர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் மீது பெயிண்ட் ஸ்பிரே அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மேலும் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட தளத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை செயலிழிக்க செய்து அதன் பிறகு திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக தகவல்கள் வந்தன. மேலும், அவரது முகம் கண்காணிப்பு கேமிராவில் அடையாளம் தெரியாமல் இருக்க அவரது முகத்தில் முகமூடியும், கைகளில் கையுறையும் அணிந்தபடி உள்ளே வந்து 16 கிலோ எடையுள்ள தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. 

நகைக்கடைக்குள் நுழையும் மர்ம நபர் 25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும், மெலிந்த தேகத்துடன் இருப்பதால் அந்த வயதுடைய நபர்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் பட்டியலை கொண்டு தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நகைக்கடையில் திருட்டுச் சம்பவம் நடந்து நேரத்தில் கடையின் சற்று தொலைவில் ஒரு ஆட்டோ ஒன்று நீண்ட நேரமாக நிற்பது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் நடத்தியதில் அந்த ஆட்டோ உள்ளூரைச் சேர்ந்தது என்பதை கண்டுபிடித்தனர். 

மேலும் வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமன்  என்பவரை கைதுசெய்து போலீசார் நேற்று முதல் விசாரித்து வருகின்றனர்.  நகை திருட்டு வழக்கில் பிடிப்பட்டுள்ள ராமன் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் தங்கியிருந்த ஒடுக்கத்தூர் பகுதியில் தற்போது வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  மேலும் ஒடுக்கத்தூர் அடுத்த உத்திர காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios