வாலிபரை கத்தியால் குத்தி நகை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருரை தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், செம்பியகுடியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (22), தஞ்சாவூரில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் தினேஷ், துபாய் செல்வதால் அவரை சென்னை விமான நிலையத்திற்கு வந்து வழி அனுப்புவதற்காக கடந்த 23ம் தேதி சென்னை வந்தார்.

மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள மற்றொரு நண்பர் ராகுல் என்பவரை அழைத்து செல்ல இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். ஆலப்பாக்கம், பெருமாள் கோயில் தெரு வழியாக நடந்து சென்றபோது  பைக்கல் வந்த 3 பேர் ஜெகதீஸ்வரனை வழி மறித்து அவர் கழுத்தில் இருந்த நகையை கேட்டுள்ளனர். நகையை கொடுக்க ஜெகதீஸ்வரன் மறுத்ததால் கத்தியை எடுத்து அவரது காலில் கிழித்துவிட்டு, அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து சென்றனர்.

 

தகவலறிந்து மதுரவாயல் போலீசார் , சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த ஜெகதீஸ்வரனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்கள் குறித்து விசாரித்தனர். அதில், ஆலப்பாக்கம் ஸ்ரீதேவி நகரை சேர்ந்த கார்த்திக் (22) மற்றும் சூர்யா (21) ஆகியோர் ஜெகதீஸ்வரனை தாக்கி நகையை பறித்தது தெரிந்தது. 

இதயைடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, செல்போன், 2 சவரன் செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.