வேலூர் அருகே புழல் சிறை வார்டன் உட்பட ஒரே இரவில் 3 பேர் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 3 பேர் கொலை சம்பவத்தை 7 பேர் கும்பல் அரங்கேற்றியுள்ளது. 

வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் அசோக்(26). இவர் கடந்த ஏப்ரல் மாதம் அரியூரில் கள்ளச்சாரயம் குடிக்க சென்றார். அப்போது, இவருக்கும் பிரபல ரவுடியான எம்எல்ஏ ராஜா கும்பலைச் சேர்ந்த 7 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அசோக்கை ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 7 பேர் கைது செய்யப்பட்டு அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தனர். 

இந்நிலையில், அசோக்கின் நெருங்கிய நண்பரான அரியூரைச் சேர்ந்த காமேஷ், நண்பனை கொலை செய்தவர்களை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. சி.எம்.சி மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வந்த நண்பன் திவாகரையும் புழல் சிறை வார்டனாகப் பணியாற்றி வந்த நண்பன் தணிகைவேலையும் தனது திட்டத்தில் சேர்த்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வாரத்துக்குள் 7 பேரையும் பழிதீர்க்க மூவரும் காத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், இவர்களது திட்டம் எதிர் தரப்பு கும்பலுக்கு தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து முந்திக்கொண்ட 7 பேர் கும்பல், நேற்று இரவு ஊசூர் அடுத்த புலிமேடு பகுதியில் வைத்து திவாகரையும் தணிகை வேலையும் வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து அரியூர் வந்து, காமேஷையும் வெட்டிக் கொன்றதாக போலீசார் கூறுகின்றனர். இந்த மூன்று கொலைகளையும் குடிபோதையில் அரங்கேற்றிவிட்டு 7 பேரும் அந்தப் பகுதியிலேயே சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே இரவில் அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்ட 3 கொலைகளால் வேலூர் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.