சென்னை உட்பட, தமிழகம், மும்பை மற்றும் பிர மாநிலங்களில் உள்ள, மோகன்லால் ஜுவல்லரி நிறுவனத்திற்கு தொடர்புடைய 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.500 கோடிக்கும் மேல் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த மோகன்லால் கட்டாரியா,  மோகன்லால் ஜுவல்லரி என்ற பெயரில் மும்பை, சென்னை, மதுரை, திருநெல்வேலி உட்பட, பல்வேறு நகரங்களில் நகைக் கடைகள் நடத்தி வருகிறார். இந்நிறுவனம், முறையாக வரி செலுத்தவில்லை என வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள வருமான வரி அதிகாரிகள் உத்தரவின்படி, மோகன்லால் ஜுவல்லரியுடன் தொடர்புடைய, 32 இடங்களில், 200க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் நவம்பர் 10ம் தேதி சோதனை நடத்தினர்.

வருமான வரிச் சோதனையில், கணக்கில் வராத ரூ.400 கோடி மதிப்பிலான 814 கிலோ நகை இருப்பில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அது வரி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் வருமானத்தை குறைத்துக் காட்டும் வகையில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில், கணக்கில் வராத ரூ.500 கோடி அளவுக்கு வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.