சென்னை நீலாங்கரையில் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியை சென்னை மற்றும் பீகார் போலீசார் நேற்று நள்ளிரவு சுற்றிவளைத்து கைது செய்தனர். இதனால் சென்னையில் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற புத்தகயாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும்,  புத்த மதத் துறவிகள், வெளிநாட்டுப் பயணிகள் உட்பட பலரும் காயமடைந்ததனர்.இந்த குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இச்சம்பவத்தில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்த இம்தியாஸ் அன்சாரி, ஹைதர் அலி, முஜீப் உல்லா, ஒமர் சித்திக், அசாருதீன் குரேஷி ஆகியோர் கைது செய்து விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள்தான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் என்பது உறுதியானது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த அமைப்பிற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வந்த மேலும் பல முக்கிய குற்றவாளிகளை பீகார் போலிசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து செல்போன் ஐஎம்இஐ எண்ணை வைத்து நாடு முழுவதும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை நீலாங்கரையில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் ஷேக் அசதுல்லா பதுங்கி இருப்பதாக பயங்கரவாதியின் செல்போன் எண் சிக்னல் காண்பித்தது. இதன் அடிப்படையில் பீகார் போலிசார் சென்னைக்கு விரைந்து வந்தனர்.பின்னர் சென்னை நீலாங்கரை போலிசார் உதவியுடன் ஷேக் அசதுல்லா பதுங்கியிருந்த வீட்டை நேற்றிரவு சுற்றி வளைத்து  கைது செய்தனர்.பின்னர் இவரிடம் போலிசார் தீவிரமாக  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீதமுள்ள நான்கு குற்றவாளிகளை தேடும் பணியில் பீகார் போலிசார் ஈடுப்பட்டுள்ளனர். பிடிபட்ட ஷேக் அசதுல்லா சென்னையில் வேறு ஏதாவது சதி வேலைகளில் ஈடுபட இங்கு பதுங்கி இருந்தாரா அல்லது அவர்களுடைய அடுத்த திட்டம் என்ன என்பது குறித்தெல்லாம்  திவிர விசாரணை நடைபெற்று வருகிறது.