சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தனது தாயுடன் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “சென்னையைச் சேர்ந்த மகேஷ்  என்ற இளைஞர் , ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் முதலில் ஆணாகவும், பின்னர் மற்றொரு கணக்கில் பெண்ணாகவும் பழகி, தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து, தன்னுடன் உல்லாசமாக இருக்காவிட்டால் அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார்” என கூறி இருந்தார்.

இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார், மகேசை பிடித்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மகேஷ், முதலில் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் அந்த மாணவியிடம் நட்பாக பேசினார். நாளடைவில் நெருங்கி பழகியதால் மாணவியை தவறான உறவுக்கு அழைக்கும் விதத்தில் பேச தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அதன்பிறகு மகேசுடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இதையடுத்து மகேஷ், ‘கவுசல்யா’ என்ற பெயரில் புதிதாக ஒரு கணக்கை தொடங்கி அதன் மூலம் மாணவியிடம் பெண் போல் நடித்து பழகினார். பெண்தான் என நினைத்து, மாணவியும் அவருடன் பேசி வந்தார்.

கவுசல்யா என்ற பெயரில் பெண் குரலில் மாணவியிடம் ‘இன்ஸ்டாகிராமில்’ வீடியோ காலில் பேசினார். அப்போது மாணவி, வீட்டில் குளித்துக்கொண்டே வீடியோ காலில் பேசினார்.
அதனை பார்த்து ரசித்த மகேஷ், மாணவியின் குளியல் காட்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். 

பின்னர் அந்த ஆபாச குளியல் வீடியோவை இணையதளங்களில் வெளியிடுவேன் என்றும், அப்படி செய்யாமல் இருக்க தன்னுடன் தவறான உறவுக்கு வரும்படியும் அழைத்து மாணவியை மிரட்டினார்.

அதன்பிறகுதான் கவுசல்யா என்ற கணக்கில் தன்னுடன் பேசி வந்தது மகேஷ் என்பது மாணவிக்கு தெரிந்தது. தொடர்ந்து அவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் இதுபற்றி தனது தாயாரிடம் கூறினார். அதன்பிறகு அவர், தனது தாயுடன் வந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பள்ளி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக மகேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த அனைத்து வீடியோக்கள் மற்றும் படங்களை அழித்தனர். பின்னர் கைதான மகேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.