கொரோனா சிகிச்சைக்காக முகாமில் தங்கி இருந்தபோது குளியலறையில் மறைத்து வைத்து இளம்பெண்ணை வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ஆரம்பத்தில் கேரளாவில் கொரோனா உயர்ந்து உடனடியாக கட்டுக்குள் வந்து, மீண்டும் தற்போது கொரோனாவின் தாக்கம் கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவிலுள்ள பல்வேறு கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

அவ்வாறு கன்னியாகுமரி மாவட்டம், தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணா பார்மசி கல்லூரியில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை மையத்தில், கேரளா மாநிலம், செங்கல் பகுதியைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் 25 வயதான ஷாலு கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே சிகிச்சை மையத்தில் 20 வயது இளம் பெண் ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த இளம்பெண் அங்குள்ள குளியல் அறையில் குளித்து கொண்டிருந்தபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த செல்போனைக் கண்டு அதிர்ந்துள்ளார்.  அந்த செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் அப்பெண் குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்ததை அடுத்து, அதனை சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கொடுத்து அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

இதனால், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த செல்போனை ஆய்வு செய்தபோது அது அந்த மையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஷாலுவின் செல்போன் என தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, செல்போனை மறைத்து வைத்து வீடியோ பதிவு செய்ததை ஒப்புக்கொண்டதால் போலீஸார் அவரை கைது செய்தனர்.