சென்னையிலிருந்து அரசுப் பேருந்தில் வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  நடத்துநர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. வயது (28) இவர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேவகியாக உள்ளார்.இவர் நேற்று இரவு கோயம்பேட்டிலிருந்து கும்பகோணம் வழியாக மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் ( SETC ) பயணம் செய்துள்ளார். இந்நிலையில் நடு இரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி, தன்னை யரோ தொடுவது போல் உணர்ந்து திடீரென கண்விழித்துள்ளார்.அப்போது நடத்துநர் ராஜு தனது பின் இருக்கையில் அமர்ந்து மார்பகங்களை பிடித்ததாகவும், இதனால் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறங்கிய தமிழ்ச்செல்வி நடத்துநர் ராஜுவிடம் வாக்குவாதம் செய்ததுடன். ராஜு மீது மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.மேலும் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக முன் வந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று தமிழ்ச் செல்வி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.ஏற்கனவே ராமநாதபுரத்தில் இதே போன்று ஓடும் பேருந்தில் பெண்களிடம் ராஜு தவறாக நடந்து கொண்டதாகவும் அதனால் இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரியிடம் கேட்ட போது ராஜு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.