தினமும் குடித்து தொல்லை கொடுத்ததாலும், மைத்துனரின் மனைவியிடம் பாலியல் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாலும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மகன் ரமேஷ்குமார் (34), ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த 4–ம் தேதி தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறத்தில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், மனைவி நித்தியா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இது தொடர்பாக போலீசாரிடம் மனைவி அளித்த வாக்குமூலம்;- ரமேஷ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இஷ்டத்திற்கும் செலவு செய்து வந்தார். குடும்ப செலவிற்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே, நித்யாவின் தம்பி அரவிந்தனின் மனைவியிடம் ரமேஷ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனைவி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார். 

இந்நிலையில், குடும்ப வறுமையை அடுத்து நித்யா மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் சித்தாள் வேலைக்கு சென்றனர். அப்போது கணபதிக்கும் நித்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து, தனிமையில் இருக்கும் போது இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நித்யா, அவரது கள்ளக்காதலன் கணபதி, தம்பி அரவிந்தன் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷ்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்துள்ளனர். ஆனால், அவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துவிட்டார்.  

இதனையடுத்து, மீண்டும் குடித்துவிட்டு மனைவிக்கும் மைத்துனரின் மனைவிக்கும் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அடைந்த நித்யா மற்றும் அவருடைய தம்பி அரவிந்தன், நித்யாவின் கள்ளக்காதலன் கணபதி ஆகிய மூவரும் சேர்ந்து ரமேஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டனர். தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு கணபதியும் அரவிந்தனும் அழைத்துச்சென்று அங்கு மதுபாட்டில்களை வாங்கினர். பின்னர் ஏரிக்கு சென்று மதுவில் மீண்டும் வி‌ஷத்தை கலந்து ரமேஷ்குமாருக்கு குடிப்பதற்காக கணபதி கொடுத்துள்ளார். அதனை குடித்த ரமேஷ்குமாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அருகே இருந்த கல்லை எடுத்து ரமேஷ்குமார் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்து விட்டு தப்பிச்சென்று விட்டார். கொலை நடந்தபோது அரவிந்தன் சற்று ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நித்யா, அவரது தம்பி அரவிந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.