நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள நாட்டாகவுண்டன்புதூர் காவிரி ஆற்றில் சில தினங்களுக்கு முன்பு ஆண் பிணம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குமாரபாளையத்தை சேர்ந்த தொழிலாளி சின்ராஜ் என்பதும், இவரும், இவரது நண்பர் குமாரபாளையத்தை சேர்ந்த கூள குமார் என்பவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சந்தேகத்தின்பேரில் கூள குமாரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, அவர் சின்ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் சின்ராஜ் எனது அண்ணியுடன் தொடர்பு வைத்திருந்தார். 

இதனால் அவரை கடந்த 11-ந் தேதி பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலிக்கு கூட்டிச்சென்று மது வாங்கி கொடுத்தேன். பின்னர் எனது அண்ணியுடன் உள்ள தொடர்பை விட்டு விடும்படி கூறினேன். அவர் மறுக்கவே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் நான் அவரது வயிற்றில் கத்தியால் குத்தினேன்.

பின்னர் தலையை தனியாக அறுத்து அவரை கொலை செய்தேன். அவரது உடலை ஆற்றில் வீசினேன். தலையை தனியாக பிளாஸ்டிக் பையில் போட்டு அதையும் ஆற்றில் வீசினேன். பின்னர் ஒன்றும் தெரியாதது போல இருந்து கொண்டேன் என தெரிவித்தார்.இதையடுத்து  சின்ராஜின் தலையை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.