மனைவியின் கள்ளக்காதலனை அடித்து கொலை செய்து, ஏரிக்கரையில் புதைத்துவிட்டு கணவர் போலீசில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய காஞ்சிபுரம் ,  ஜவகர்லால் தெருவை சேர்ந்த கார் ஓட்டுனர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன் காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்பவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், காரை பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருடன் காமாட்சி தகாத உறவில் இருந்துள்ளதாக தெரிகிறது. பலமுறை இது குறித்து ரவிச்சந்திரன் கண்டித்துள்ள நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன் தினேஷ் உடன் காமாட்சி சென்றுள்ளார். பின்னர், மீண்டும் வீடு திரும்பினர். 

இந்நிலையில், கடந்த 2ம் தேதி மாலை பணி முடிந்து ரவிசந்திரன் வீடு திரும்பினார். அப்போது, காமாட்சியுடன் தினேஷ் பேசி கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரமடைந்தார். பின்னர், அங்கு கிடந்த கட்டையால் தினேஷை தாக்கியுள்ளார். இதனால், சம்பவ இடத்திலேயே தினேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக ரவிச்சந்திரன் ஜேசிபி எந்திரத்தில் தினேஷ் உடலை எடுத்துக் கொண்டு சிறுவாக்கம் ஏரிக்கரையில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டு சென்றுள்ளார். 

இந்நிலையில் நேற்று  மதியம் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.இதையடுத்து காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வட்டாட்சியர் பவானி முன்னிலையில் சிறுவாக்கம் கிராம ஏரிக்கரையில் புதைக்கப்பட்ட இடத்தில் தினேஷின் உடல் தோண்டி எடுக்கபட்டு  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.