சிதம்பரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கொன்று புதைத்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக மனைவி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் வேளங்கிராயன்பேட்டை  கிராமத்திலுள்ள தனியார் அனல் மின்நிலையத்திற்கு அருகில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சேத்தியாத்தோப்பு பெரியநற்குணம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (32) என்பது தெரியவந்தது. மேலும், இவரை கடந்த 17ம் தேதி முதல் காணவில்லை என இவரது மனைவி தீபா கடந்த 21ம் தேதி சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

காவல்துறையினரின் விசாரணையில் சத்தியராஜை, அவரது மனைவி தீபாவே காதலன் ஐயப்பனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலமானது.கொலையான சத்தியராஜும், ஐயப்பனும் நண்பர்கள். அந்த பழக்கத்தில் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் ஐயப்பனுக்கும் சத்யராஜ் மனைவி தீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதை நேரடியாக பார்த்த சத்யராஜ் இருவரையும் எச்சரித்து உள்ளார். 

பின்னர், சத்யராஜ் உயிரோடு இருந்தால் நிம்மதியாக இருக்கமுடியாது என நினைத்து தீபா ஐயப்பன் ஆகியோர் கூலிப்படையை ஏவி சத்யராஜை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த 17ம் தேதி அவரை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சாத்தமங்கலம் மதுக்கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் போதையில் தள்ளாடிய அவரை அருகிலுள்ள வாழைத் தோப்புக்குள் அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது சடலத்தை அங்கேயே புதைக்க ஏற்பாடு செய்தபோது மழையால் தண்ணீர் அதிகமாக இருந்ததால் புதைக்க இயலவில்லை.

இதையடுத்து ஐயப்பன் சொகுசு காரை எடுத்து வந்து அதில் சத்யராஜ் உடலை ஏற்றி பரங்கிப்பேட்டை அருகே உள்ள வேலங்கிராயப்பேட்டை கடற்கரை பகுதிக்கு எடுத்து வந்து மணலில் புதைத்து உள்ளனர். சில நாள் கழித்து மீண்டும் சடலம் புதைத்த இடத்தில் சென்று பார்த்தபோது அந்த இடத்தில் சடலம் மேலே வருவது போல் இருந்தது. பின்னர் நர்சரி கார்டன் சென்று புல் வாங்கி வந்து சடலத்தின் மேல் வைத்துள்ளனர். அதனையும் மீறி சடலத்தின் கைகள் வெளியே தெரிந்ததால் கொலையாளிகள் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. தீபா, காதலன் ஐயப்பன் கூலிப்படையை சேர்ந்த அராத்து என்கிற வினோத், அருண் , கார்த்தி மற்றும் விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.