அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நம்மங்குணம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சுடர்மணி. இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை.

சுடர்மணியுடன் அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். ஒரே கிராமத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் இருவரும் நண்பர்களாக பழகிவந்தனர். இருவரும் கிராமத்திற்கு வரும்போது சுடர்மணி வீட்டிற்கு சரவணன் அடிக்கடி வந்துள்ளார். அப்போது சுடர்மணியின் மனைவி சங்கீதாவிற்கும் சரவணனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுடர்மணிக்கு சரவணன் அடிக்கடி மது வாங்கி கொடுத்துவிட்டு அவர் மனைவியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஆபாசமான முறையில் இதனை தனது செல்போனிலும் சரவணன் செல்பியும் எடுத்துள்ளார்.

இது சுடர்மணிக்கு தெரிய வந்ததையடுத்து  கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக கணவனை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் சங்கீதா வசித்து வருகிறார்.

சரவணன், சங்கீதாவுடன் உல்லாசமாக இருந்த போது சங்கீதாவிற்கு தெரியாமல் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு எனது ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லை யென்றால், இந்த படத்தை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக சரவணன் தொடர்ந்து மிரட்டி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 19-ந் தேதி சங்கீதாவின் உறவினர் அறிவழகன் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை சரவணன் அனுப்பி வைத்துள்ளார். இதுபற்றி சங்கீதாவின் உறவினர் அறிவழகன் கேட்டதால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.