கும்மிடிப்பூண்டியில்  கள்ளக்காதல் விவகாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கத்தியால் குத்திக் கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஜி ஆர் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(44).  இவர் கொத்தனார். இவரது மனைவி புஷ்பா(40) இவர்களது 2 மகன்களில் ஒரு மகனுக்கு திருமணமாகிவிட்டத. மற்றொரு மகன்  பிளஸ் டூ படித்து வருகிறான். இந்நிலையில், புஷ்பா சில மாதங்களாக அடிக்கடி செல்போனில் யாரிடமோ சிரித்து பேசியதால் கணவர் ரமேஷ் சந்தேகம் அடைந்த மனைவி கள்ள தொடர்பு இருக்குமோ என்று கருதி அவருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். சில நாட்களாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வேறொருவருடன் புஷ்பா தனிமையில் இருந்ததாக ரமேஷுக்கு தெரியவந்துள்ளது. இதனால் மனைவியை கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது.


 இவர்களின் மகன் நேற்று உறவினர் வீட்டுக்குச் சென்றபோது மனைவியுடன் தகராறில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கடும் ஆத்திரத்தில் இருந்த ரமேஷ்  இன்று காலை 3 மணி அளவில் எழுந்துள்ளார். அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி புஷ்பா கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். வலி தாங்க முடியாமல் அலறியதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். ஆனால், அதற்குள் புஷ்பா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கிடந்தார்.


இது தொடர்பாக கவரபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கையில் ரத்தக்கறையுடன் நின்றிருந்த ரமேஷை கைது செய்தனர். பின்னர், புஷ்பா உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக  பொன்னேரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளத்தொடர்பால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.