நாமக்கல் அருகே கணவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்து விட்டதாக கூறி நாடகமாடிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

நாமக்கல் அருகே கொடிக்கால் புதூரை சேர்ந்த கட்டட மேஸ்திரி ராமன், நூற்பாலை ஒன்றில் பணியாற்றி வந்த சத்யா என்ற பெண்ணை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தீபிகா (12), ஸ்ரீ ஹரி (8) ஆகிய இரு குழந்தைகள் உள்ளது.  கட்டட வேலை செய்து வரும் ராமனுக்கு அதற்கு உதவியாளராக இருக்கும் ராமமூர்த்திக்கும் இடையே நட்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், ராமனின் மனைவி சத்யாவிற்கும் ராமமூர்த்திக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காலபோக்கில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வெளியே சென்ற நேரத்தில் ராமமூர்த்தியுடன் மனைவி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும், இந்த தகவல் அக்கம் பக்கத்தினர் மூலமாக ராமனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் மனைவி சத்யாவை ராமன் கண்டித்துள்ளார். ஆனாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சத்யா அவருடைய நட்பை ராமமூர்த்தியுடன் தொடர்ந்துள்ளார். இதனால் ராமன் மற்றும் சத்யா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்து கட்ட இருவரும் திட்டம் தீட்டினர். கடந்த 21ம் தேதி  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராமனை இருவரும் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஆனால் உடல்நிலை சரியில்லாமல்தான் கணவர் இறந்து விட்டதாக கூறி உறவினர்களிடம் நாடகமாடினார்.  பின்னர், கணவரின் சடலத்தை எரித்து இறுதி சடங்குகளை செய்துள்ளார். 

இதனிடையே ராமனின் இறப்பில் சந்தேகமடைந்த அவரது தம்பிகள் பாஸ்கர் மற்றும் இலட்சுமணன் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மனைவி சத்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், கள்ளக்காதலுடன் இணைந்து தனது கணவரை கொலை செய்ததை சத்யா ஒப்புகொண்டதையடுத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.