கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை அடித்துக்கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழக - ஆந்திர எல்லையான சித்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சடலமாக மீட்கப்பட்டவர் கிருஷ்ணகிரியை பி.ஜி.துர்கம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் கூறுகையில் ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. குழந்தைகள் இல்லாததால் அதே கிராமத்தை சேர்ந்த விஜயம்மா என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். ஈஸ்வரன் தொடர்ந்து மது அருந்திவிட்டு விஜயம்மாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த விஜயம்மாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

இதையறிந்த ஈஸ்வரன், தனது மனைவி விஜயம்மாவை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் தம்பதியிடையே தொடர்ந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஈஸ்வரனை கொலை செய்ய விஜயம்மாவும், சத்தியமூர்த்தியும் திட்டமிட்டனர். அதன்படி, கடந்த மாதம் 20-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வனப்பகுதியில் மது அருந்தலாம் எனக்கூறி சத்தியமூர்த்தி, விஜயம்மா ஆகியோர் ஈஸ்வரனை அழைத்து சென்றுள்ளனர். இருவரும் சேர்ந்து ஈஸ்வரனுக்கு அதிகளவு மது கொடுத்துள்ளனர். போதை அதிகமானதும் மயங்கி விழுந்த ஈஸ்வரனை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். 

பின்னர், ஈஸ்வரனின் முகத்தை அடையாளம் தெரியாத வகையில் கற்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றனர். இதையடுத்து விஜயம்மா, சத்தியமூர்த்தி ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.