எண்ணூரில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த அக்காவை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு 19-வது பிளாக்கை சேர்ந்தவர் விஜயகுமார், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (29). இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். மனைவியின் நடத்தை சரியில்லாததால் அவரை பிரிந்து விஜயகுமார் தனது மகளுடன் வண்ணாரப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் குப்பத்தைச்சேர்ந்த சுப்புலட்சுமியின் சித்தி மகன் பிரதாப் (26) என்பவர் சுப்புலட்சுமியை பார்க்க சுனாமி குடியிருப்புக்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. சிறிது நேரம் கழித்து சுப்புலட்சுமி கதவை திறந்துள்ளார். அப்போது சுப்புலட்சுமி மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

உடனே பிரதாப் ஏன் பதற்றமாக இருக்கிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு மழுப்பலாக சுப்புலட்சுமி பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பிரதாப், வீட்டுக்குள் சென்று பார்த்த போது, கட்டிலுக்கு அடியில் மீஞ்சூரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் பதுங்கி இருந்தது தெரிந்தது. உடனே தனது அக்காள் உடன் அவர் உல்லாசமாக இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த பிரதாப், அவரை வெளியே இழுத்து போட்டு சரமாரியாக அடித்து உதைத்து ஒரு அறையில் பூட்டியுள்ளார். பின்னர், தனது அக்காள் சுப்புலட்சுமியை சரமாரியாக தாக்கினார். உடனே அருகில் இருந்த தலையணையை எடுத்து முகத்தில் அழுத்தி கொலை செய்து விட்டு, எண்ணூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில், சுப்புலட்சுமிக்கும், ஜானகிராமனுக்கும் பல மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இரவு நேரத்தில் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு ஜானகிராமன் வந்ததும், பின்னர் இருவரும் குடித்து விட்டு உல்லாசமாக இருப்பதும் தெரியவந்தது.